www.vwinslow.com
ஆண்டவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார்( சங் 37:4)

தமிழ் கத்தோலிக்க இணையம்

Click here to edit subtitle

News / Articles

Basilica of the Holy Rosary in italy

Posted on February 8, 2020 at 2:20 AM

அன்னைமரியா திருத்தலங்கள் – இத்தாலியின் லூக்கா நகர் ரோசா அன்னைமரியா


எத்தனை வகை மலர்களைப் பார்த்தாலும் ரோசாவைக் கண்டவுடன் அது அத்தனை பேரின் மனதையும் கொள்ளை கொண்டு விடுகின்றது. அதன் அழகும், மணமும், பல வண்ணங்களும் அனைவரையும் கவர்ந்திழுக்கின்றன. ஞானத்தின் புகழ்ச்சி பற்றிச் சொல்லும் சீராக் புத்தகம் 24,14ல் “எங்கேதி ஊரின் பேரீச்சமரம் போலவும், எரிகோவின் ரோசாச் செடி போலவும்” என்று குறிப்பிடுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளைக் கொண்ட ரோசா மலர், அன்னைமரியாவுக்கு விருப்பமான மலராக இருப்பதை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது தெரிய வருகிறது. மெக்சிகோ நாட்டு Guadeloupeல் 1531ம் ஆண்டு டிசம்பரில் அன்னை மரியா, 57 வயதான Juan Diegoவுக்குக் காட்சி கொடுத்தபோது, தனது காட்சி உண்மையானது என்பதைக் காட்டுவதற்கு ரோசா மலர்களையே பயன்படுத்தினார். ரோசா மலர்கள் பூக்காத குளிர் காலத்தில் Juan Diegoன் மேல் போர்வையில் அழகான ரோசாக்களை நிரப்பினார் அன்னைமரியா. அதோடு, அந்தப் போர்வையில் அவற்றை அழகாக வரிசைப் படுத்தியிருந்தார் அன்னை மரியா. பிரான்ஸ் நாட்டு La Saletteல் அன்னைமரியா தனது காட்சியில் ரோசா மலர்களாலான மூன்று மாலைகளை அணிந்திருந்தார். அவரது காலணிகளின் விளிம்புகளிலும் சிறிய ரோசா மலர்கள் இருந்தன. அதேபோல் அன்னைமரியா காட்சி கொடுத்த Lourdes, Pontmain, Pellevoisin, Beauraing,, Banneaux போன்ற இடங்களிலும் அவர் அழகான ரோசாக்களைக் கொண்டு வந்திருந்தார். Josefa Menendez என்ற அருள்சகோதரிக்கு, அன்னைமரியா தனது பாவமாசற்ற அமல இதயத்தைக் காட்டியபோது அந்த இதயம் சிறிய வெள்ளை ரோசாக்களால் சூழ்ந்திருந்தது. எனவே அன்னைமரியாவை ரோசா அன்னை என நாம் அழைக்கலாம்.

அதோடு, அன்னைமரியாவின் திருமண ஆடை, “நீலம், வெள்ளை, வைலட், பொன் ஆகிய நிறங்களாலான ரோசாக்களால் மிக அழகாக நெய்யப்பட்டிருந்தது” என்றும், கபிரியேல் வானதூதர் அன்னைமரியாவுக்கு இயேசு பிறப்பை அறிவித்த பின்னர், அந்தத் தூதர் அவ்விடத்திலிருந்து மறைந்து சென்ற பாதையில், பாதி மலர்ந்த ரோசா மலர்கள் அன்னைமரியா மீது பொழியப்பட்டதாகவும் பாரம்பரியமாகச் சொல்லப்பட்டு வருகிறது. அன்னைமரியாவுக்கு மிகவும் பழக்கப்பட்ட தமாஸ்கு நகரில் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் ரோசா மலர் தொழில் செய்து வாழ்க்கை நடத்துகின்றனர். இந்த மலர்களிலிருந்தே அத்தார் நறுமணத்திரவியமும், ரோஸ்வாட்டரும் தயாரிக்கப்படுகின்றன. இந்த நகர மக்கள் எங்கு சென்றாலும் தங்களுடன் ரோசா நறுமணத் தைலத்தையும் எடுத்துச் செல்கின்றனர். எனவே நாமும் ரோசா அன்னைமரியாவின் நற்பண்புகளை அணிந்திருந்தால் நாம் செல்லுமிடமெல்லாம் நறுமணத்தைத் தாங்கிச் சென்று, ரோசா அன்னைமரியா வழியாக கடவுளிடம் மற்ற ஆன்மாக்களை அழைத்துச் செல்லலாம். பழைய இலத்தீன் நாள் குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பல அன்னைமரியா திருவிழாக்களில் “ரோசா அன்னைமரியா விழாவும்” ஒன்று. இத்திருவிழா, இத்தாலியின் Lucca நகரில் சனவரி 30ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. அந்நகர் புனிதர்கள் பேதுரு பவுல் ஆலயத்திலுள்ள அன்னைமரியா திருவுருவத்தின் தோள்களில் சனவரியில் மூன்று ரோசா மலர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே 'Rosa Mystica' என்றும் அன்னைமரியா அழைக்கப்படுகிறார்.

அன்னைமரியா குறித்து எழுதிய புனித Clairvauxன் Bernard, மனித சமுதாயத்தின் முதல் பெண்ணாகிய ஏவாள் ஒரு முள்ளாக இருந்து காயப்படுத்தி அனைவருக்கும் மரணத்தைக் கொண்டு வந்தார். ஆனால் மரியாவில் ரோசாவைப் பார்க்கிறோம். இது ஒவ்வொருவரின் புண்களையும் இதமாகத் தடவிக் கொடுத்து குணமாக்கி மீட்பை பெற்றுக் கொடுத்தது. மரியா, ரோசா மலராக இருந்தார். வெள்ளை ரோசா, கன்னிமைக்கும், சிவப்பு ரோசா, அன்புக்கும் அடையாளங்கள். வெள்ளை, அன்னைமரியாவின் உடலிலும், சிவப்பு அவரது ஆன்மாவிலும் இருக்கின்றன. வெள்ளை, நற்பண்புகளைத் தேடுவதையும், சிவப்பு, தீயவைகளை அழிப்பதையும் குறிக்கின்றன என்று சொல்கிறார் புனித பெர்னார்டு.

சோதனைப் புயல்கள் வீசுகின்றனவா, துன்பப்படுகுழியில் கஷ்டப்படுகிறீர்களா, அன்னைமரியாவை உற்று நோக்கி அவரை அழையுங்கள். தற்பெருமை, பொறாமை, பழித்துக்கூறுதல் போன்ற காற்றால் அலைக்கழிக்கப்படுகின்றீர்களா, அன்னைமரியாவை உற்று நோக்கி அவரைக் கூப்பிடுங்கள். உடலின்பத்தால், கோபத்தால், பேராசையால் உங்கள் மனது அடித்துச் செல்லப்படுகின்றதா, அன்னைமரியாவை உற்று நோக்குங்கள். உங்கள் பாவங்களால் கஷ்டப்படுகிறீர்களா, உங்களது மனசாட்சியின் தீமைகளால் குழம்பிப் போயிருக்கிறீர்களா, இறந்த பின்னர் நடக்கும் நீதித்தீர்ப்புக்குப் பயந்து கொண்டிருக்கிறீர்களா, கவலையாக, சோகமாக இருக்கிறீர்களா, அன்னைமரியாவை நினைத்துப் பாருங்கள். ஆபத்தில், குழப்பத்தில், இடர்களில் அன்னைமரியாவை நினைத்து அவரை அழையுங்கள். அன்னைமரியாவின் பெயர் உங்கள் வாயிலும் இதயத்திலும் எப்போதும் இருக்கட்டும். அவரது உதவியைக் கேட்டு உதவிகளை நீங்கள் பெறலாம் அதேநேரம் அன்னைமரியா வாழ்ந்த விதத்தை முன்மாதிரிகையாய்க் கொள்ள எப்போதும் மறக்க வேண்டாம் என்றும் புனித பெர்னார்டு சொல்கிறார்.

நீங்கள் அன்னைமரியாவைப் பின்பற்றினால் நெறிதவறிப் போகமாட்டீர்கள். நீங்கள் அன்னைமரியாவிடம் செபித்தால், சோர்வடையமாட்டீர்கள். நீங்கள் அன்னைமரியாவை நினைத்தால் தொலைந்து போகமாட்டீர்கள். நீங்கள் அன்னைமரியாவைப் பற்றிக்கொண்டால் கீழே விழமாட்டீர்கள். அன்னைமரியா உங்களைப் பாதுகாத்தால் நீங்கள் பயப்படத் தேவையில்லை. அவர் உங்களது வழிகாட்டியாக இருந்தால் நீங்கள் களைப்படையமாட்டீர்கள். அவர் உங்களுக்குச் சார்பாக இருந்தால் நீங்கள் உங்கள் இலக்கை அடைவீர்கள். நீங்களே உங்கள் வாழ்வில் அனுபவிப்பீர்கள்.

கர்தினால் Newman அன்னைமரியா பற்றி இவ்வாறு சொல்கிறார் - ஆன்மீக உலகில் மிக மிக அழகான மலராக இருப்பவர் அன்னைமரியா. கடவுளின் அருளால், தூய்மை, மகிமை ஆகிய அனைத்து மலர்களையும் அவர் வறண்ட நிலங்களில் பூக்கச் செய்கிறார். அனைத்து ஆன்மீக மலர்களுக்கும் இவரே அரசி. எனவே அன்னைமரியா ரோசா என அழைக்கப்படுகிறார். ஏனெனில் ரோசா மலர் அனைத்து மலர்களிலும் மிக அழகானது. எனினும் அவர் ஆடம்பரங்களை விரும்பாது மறைவாக வாழ்பவர் என்று.

அன்பு நேயர்களே, ரோசா அன்னை மரியா பற்றி இன்னும் சில புதுமைகள் இருக்கின்றன. அவை அடுத்த வாரத்தில் தொடரும்.... ரோசா அன்னைமரியாவிடம் செபிப்போம். ரோசா மலர் போன்று நாமும் நற்பண்புகளால், தூய்மையால், வாழ்க்கையில் நறுமணம் வீசுவோம். நம்மைச் சுற்றி வாழ்வோரையும் அந்த நறுமணத்தால் நிரப்புவோம்.

 

Categories: History of Shrine / Basilica