www.vwinslow.com
ஆண்டவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார்( சங் 37:4)

தமிழ் கத்தோலிக்க இணையம்

Click here to edit subtitle

News / Articles

Basilica of Caravaggio in Italy

Posted on February 8, 2020 at 2:20 AM

அன்னைமரியா திருத்தலங்கள் – கரவாஜ்ஜோ அன்னைமரி, இத்தாலி


கரவாஜ்ஜோ அன்னைமரி திருத்தல வரலாறு 15ம் நூற்றாண்டின் முதல் பாதி பகுதியிலிருந்து ஆரம்பமாகின்றது. கரவாஜ்ஜோ நகரம், வட இத்தாலியின் லொம்பார்தியா மாநிலத்தில், பெர்கமோ மாவட்டத்திலுள்ளது. இது மிலானுக்கு கிழக்கே, 40 கிலோ மீட்டர் தூரத்திலுள்ளது. இந்தக் கரவாஜ்ஜோவில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜோவனெத்தா வரோலி. இந்தப் பக்தியுள்ள இளம்பெண் ஓர் அருள்சகோதரியாக துறவு வாழ்வைத் தெரிந்தெடுக்க விரும்பினார். ஆனால் அவரது தந்தை பியத்ரோ வாக்கி என்பவர், தனது மகளுக்குத் திருமணம் செய்து அழகு பார்க்க விரும்பினார். ஜோவனெத்தாவும் தனது தந்தையை மகிழ்ச்சிப்படுத்த விரும்பி பிரான்செஸ்கோ வரோலி என்ற விவசாயியை மணந்தார். ஆனால் ஜோவனெத்தாவின் தந்தை நினைத்ததுபோல் அவரது திருமண வாழ்வு மகிழ்ச்சியாக அமையவில்லை. பிரான்செஸ்கோ நல்ல மனிதராக வாழவில்லை. தனது மனைவியின் வாழ்வைத் துன்பமயமாக்கினார். அது 1432ம் ஆண்டு மே 26ம் தேதி. அன்று ஜோவனெத்தாவுக்கு உடம்பு நன்றாக இல்லை. அப்படியிருந்தும், மாடுகளுக்குப் புல்வெட்டி வருமாறு அவரை வயற்காட்டுக்கு அனுப்பினார் அவரது கணவர் பிரான்செஸ்கோ. அன்று நிறைய புல்களை வெட்டி பெரிய கட்டாக கட்டிய பின்னர் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் ஜோவனெத்தா. ஒருவேளை ஜோவனெத்தா களைப்பினால் கண் அயர்ந்து தூங்கியிருக்க வேண்டும்.

திடீரென ஜோவனெத்தா நிமிர்ந்து பார்த்தபோது, புனித கன்னிமரியா அவர்முன் நிற்பதைக் கண்டார். அப்போது அன்னைமரியா ஜோவனெத்தாவிடம், நல்ல இதயம் கொண்டிரு. உனது கஷ்டங்கள் விரைவில் மறைந்து போகும். இயேசு, மக்களின் பாவங்களால் வருத்தமடைந்துள்ளார். மக்கள் மனம்வருந்தி தங்களது வழிகளைத் திருத்திக் கொண்டால், ஜோவனெத்தா அவர்களுக்காக கிறிஸ்துவின் இரக்கத்தைப் பெற்றுக் கொடுக்கலாம். இல்லாவிட்டால் கிறிஸ்து அவர்களைத் தண்டிப்பார். இவ்வாறு எச்சரித்த அன்னைமரியா ஜோவனெத்தாவிடம், இந்த இடத்தில் தனது பெயரில் ஓர் ஆலயம் கட்டுமாறும் கேட்டுக்கொண்டார். தனது விருப்பங்களை மக்களுக்குச் சொல்லுமாறும் கூறினார். மக்கள் தனது விருப்பத்தின்படி நடந்து கொண்டால் அவர்களைப் பல வரங்களால் ஆசீர்வதித்து புதுமைகளையும் செய்வேன் என்று சொல்லி மறைந்தார் அன்னைமரியா. ஆயினும் அன்னைமரியா அந்த இடத்தில் காட்சி கொடுத்ததன் அடையாளமாக, அவர் அந்த இடத்தில் நின்றுகொண்டிருந்த பாறையின்மீது, தனது பாதங்களின் அடையாளங்களை விட்டுச் சென்றார். ஆம். அந்தக் கல்லின்மீது அன்னைமரியாவின் பாதப் பதிவுகள் இருந்தன. அதோடு, அந்தப் பாறைக்கடியிலிருந்து சுத்தமான தண்ணீரும் பீறிட்டு அடித்தது.

ஜோவனெத்தா கரவாஜ்ஜோவுக்கு விரைந்து சென்று தான் கண்ட காட்சி பற்றி ஊர் மக்களிடம் விவரித்தார். அன்னைமரியா தனக்குச் சொன்னவைகளையும் எடுத்துச் சொன்னார். ஆனால் ஜோவனெத்தாவின் சொற்களைச் சிலரே நம்பினர். ஜோவனெத்தா கதை கட்டுகிறார் என்று கேலி செய்து அவரைக் கிண்டலடித்தனர். சிறிது நேரம் கழித்து, சிலர் அந்த இடத்துக்குச் சென்று, அந்தப் பாறைக்கடியிலிருந்து ஊற்றெடுத்து ஓடிக்கொண்டிருந்த சுத்தமான தண்ணீரில் குளித்தனர். அவர்களுக்கிருந்த உடல் வலியும் மற்ற நோய்களும் மாயமாய் மறைந்து போயின. இவர்களைப் பின்தொடர்ந்து மற்ற மக்களும் அவ்வாறே செய்தனர். அவர்களும் அந்த நீரில் அற்புதம் நடப்பதை அனுபவித்தனர். அதன் பின்னர் ஜோவனெத்தாவின் காட்சியையும், அக்காட்சியில் அவர் கேட்ட அன்னைமரியாவின் வார்த்தைகளையும் நம்பத் தொடங்கினர். அந்தச் செய்தி சுற்றுப்புறமெங்கும் பரவத் தொடங்கியது. மிலான் நகரக் கோமகன் Filberto Marie Viscontiயின் உதவியுடன் மக்கள் அவ்விடத்தில் திருத்தலம் ஒன்றைக் கட்டினார்கள். மக்கள் கூட்டம் அவ்விடத்துக்கு அதிகமாக வருவதைக் கண்ட அப்போதைய மிலான் பேராயராக இருந்த புனித சார்லஸ் பொரோமியோ, 1575ம் ஆண்டில் பெல்லெகிரினியோ பெல்லெகிரினி(Pellegrino Pellegrini) என்ற கட்டிடக் கலைஞரின் உதவியால் அந்தத் திருத்தலத்தைப் பெரிதாகக் கட்டினார். இதற்குப் பின்னர் சில சீர்திருத்தங்களும் இதில் செய்யப்பட்டன. இதுவே தற்போது வெகு அழகாக புகழுடன் விளங்கும் கரவாஜ்ஜோ அன்னைமரியா திருத்தலம் ஆகும்.

இன்றும் ஆயிரக்கணக்கானத் திருப்பயணிகள் அங்குச் சென்று அன்னைமரியாவின் அருள்வரங்களைப் பெற்று மகிழ்கின்றனர். கரவாஜ்ஜோ அன்னைமரி விழா, அன்னைமரியா காட்சி கொடுத்த மே 26ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. அந்த நவநாள் காலங்களில் மக்கள், சிறப்பாக, வட இத்தாலியிலுள்ள மக்கள் திருப்பயணமாகச் சென்று வருகின்றனர். அன்னைமரியா, ஜோவனெத்தாவை ஆசீர்வதிப்பதுபோல் உள்ள திருவுருவம் விரிவுபடுத்தப்பட்ட இத்திருத்தலத்தில், அதுவும், அன்னைமரியா காட்சி கொடுத்த அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்னைமரியாவின் பாதத்துக்குக் கீழேயிருந்து சிறிய தண்ணீர் ஓடை இன்றும் ஓடுகிறது.

துன்பப்பட்டுக் கொண்டிருந்த ஜோவனெத்தா குடும்பத்தில் அமைதி நிலவும் என்றும், அச்சமயத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்த அண்டை மாநிலங்களின் மக்கள் மத்தியில் ஒப்புரவு ஏற்படும் என்றும், 1436ம் ஆண்டு முதல் 1445ம் ஆண்டுவரை நடைபெற்ற பிளாரன்ஸ் பொதுச்சங்கம் மூலம் கிழக்கு மற்றும் மேலைத் திருஅவைகளுக்கு இடையே ஒப்புரவு ஏற்படும் என்றும் அன்னைமரியா ஜோவனெத்தாவுக்குக் காட்சி கொடுத்தபோது கூறினார்.

இன்று அதிகம் தேவைப்படுவது ஒப்புரவு. தனிமனிதர் வாழ்விலும் சரி, குடும்பங்களிலும், சமூகங்களிலும், நாடுகளிலும், நாடுகளுக்கு இடையேயும் சரி, இன்று ஒப்புரவு அதிகம் தேவைப்படுகிறது. புனித பவுல் மனந்திரும்பிய விழாவான வருகிற வெள்ளிக்கிழமையன்று கிறிஸ்தவ ஒன்றிப்புச் செப வாரம் நிறைவடைகின்றது. நூற்றாண்டுகளாகப் பிளவுபட்டு இருக்கும் கிறிஸ்தவ சபைகள் தங்களுக்குள் ஒப்புரவாகி, ஒன்றிணைந்து கிறிஸ்துவுக்குச் சாட்சி சொல்ல வேண்டுமென்பதே அனைவரின் ஆவல். திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் கடந்த ஞாயிறன்று இந்த ஒன்றிப்பை வலியுறுத்தினார். தனிமனிதர்கள் தங்களுக்குள்ளே ஒப்புரவாகி ஓர் இணக்கமான வாழ்வு வாழ வேண்டியிருக்கிறது. ஒவ்வொருவரும் தன்னை மன்னித்து தனக்குள் சமாதானமாக வாழ வேண்டும். அப்போதுதான் அவர் மற்றவர்களோடு சமாதானமாய் வாழ்வார். அப்போதுதான் அவர் வாழும் குடும்பமும், சமுதாயமும் சமாதானமாய், ஒப்புரவுடன் வாழும். அத்தகைய இடத்தில் அன்பும் மகிழ்ச்சியும் இருக்கும். இவ்வேளையில் அமைதிக்காவும், ஒப்புரவுக்காகவும் ஏங்கும் மத்திய கிழக்கு நாடுகளை, குறிப்பாக சிரியா நாட்டை, பாலஸ்தீனத்தை, போரிடும் நாடுகளை, எல்லைப் பகுதியில் பதட்டம் நிலவும் இந்தியா, பாகிஸ்தானை நினைத்து கரவாஜ்ஜோ அன்னைமரியிடம் செபிப்போம். தாயே, அம்மா, எங்களுக்கு அமைதியையும் சமாதானத்தையும் அருளும். சபைகளுக்குள், குடும்பங்களுக்குள் ஒற்றுமையைத் தாரும்.

 

Categories: History of Shrine / Basilica