www.vwinslow.com
ஆண்டவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார்( சங் 37:4)

தமிழ் கத்தோலிக்க இணையம்

Click here to edit subtitle

News / Articles

Basilica of Loreto in Rome

Posted on February 8, 2020 at 2:25 AM

அன்னைமரியா திருத்தலங்கள் – இத்தாலியின் லொரேத்தோ திருத்தலம்


இயேசுவின் தாய் புனித கன்னி மரியா பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். அந்த இறையன்னை உலகில் எங்கெல்லாம் காட்சி கொடுத்தாரோ, அற்புதங்கள் செய்தாரோ அங்கெல்லாம், அந்தந்த இடங்களின் பெயராலே அவர் அழைக்கப்படுகிறார். வேளாங்கண்ணி மாதா, வாடிப்பட்டி மாதா, லூர்து மாதா, பாத்திமா மாதா, சலேத் மாதா, லொரேத் மாதா என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். இந்தியாவுக்கு, ஏன் ஆசிய நாடுகளுக்கு ஒரு வேளாங்கண்ணி போன்று, இத்தாலிக்கு ஒரு லொரேத்தோ என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். வேளாங்கண்ணியில் கோவில் கொண்டிருக்கும் கடலலைத் தாலாட்டும் ஆரோக்ய அன்னை திருத்தலத்துக்கு இனம், மதம், மொழி, நாடு என்ற பாகுபாடின்றி ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் செல்வது போன்று, இத்தாலியில் குடிகொண்டிருக்கும் லொரேத்தோ அன்னைமரித் திருத்தலத்துக்கும் இனம், மதம், மொழி, நாடு என்ற பாகுபாடின்றி ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். ஆண்டுதோறும் ஏறக்குறைய நாற்பது இலட்சம் திருப்பயணிகள் லொரேத்தோ அன்னைமரித் திருத்தலம் செல்கின்றனர் என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. தாயை நாடி பிள்ளைகள் செல்வது இயல்பு. இயேசுவின் தாயாம் அன்னைமரியா பல்வேறு பெயர்களில் உலகெங்கும் போற்றப்பட்டு வருகிறார். தன்னை அண்டிவரும் கோடிக்கணக்கான பிள்ளைகளுக்கு அற்புதங்களையும் ஆற்றி வருகிறார். லொரேத்தோ அன்னைமரித் திருத்தலத்துக்கு ஒரு முக்கிய சிறப்பு உள்ளதாகப் பாரம்பரியமாகச் சொல்லப்பட்டு வருகிறது.

இத்தாலியின் மத்திய பகுதியிலுள்ள மார்க்கே மாநிலத்தில் முசோனே ஆற்றின் வலது கரையில் அட்ரியாடிக் கடலுக்கு ஏறத்தாழ மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சிறிய நகரம் லொரேத்தோ. 11 ஆயிரம் மக்கள் வாழும் இந்நகரம், உரோமைக்கு வடகிழக்கில் ஏறக்குறைய 175 மைல்கள் தூரத்தில் உள்ளது. இந்நகரம், உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குவதற்கு ஒரே காரணம் அங்கு அமைந்துள்ள அன்னைமரியாத் திருத்தலமே. அதிலும், இத்திருத்தலத்துக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு சிற்றாலயம்தான் இப்புகழுக்குக் காரணம். இதை ஆலயம் என்று சொல்வதைவிட வீடு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் எருசலேமுக்கு அருகிலுள்ள நாசரேத்தின் புனித வீடுதான் இந்தச் சிற்றாலயம் என்று நம்பப்படுகின்றது. இந்த வீட்டில்தான் புனித கன்னிமரியாவுக்கு இயேசு பிறப்பு குறித்த மங்களச் செய்தியை வானதூதர் கபிரியேல் சொன்னார். நாசரேத்தில் திருக்குடும்பம் வாழ்ந்த இந்த எளிமையான வீடு செங்கற்களாலானது. இந்த வீடுதான் இத்தாலியின் லொரேத்தோ நகரிலுள்ள அழகான, பெரிய பசிலிக்காவுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இயேசுவின் இவ்வுலக வாழ்வுக்குப் பின்னர் மூன்று நூற்றாண்டுகள் கழித்து புதிதாகக் கிறிஸ்தவத்தைத் தழுவிய உரோமைப் பேரரசர் கான்ஸ்ட்டைன், இந்த எளிமையான வீட்டை நடுவில் வைத்து லொரேத்தோ அன்னைமரித் திருத்தலத்தைக் கட்டினார் என்பது வரலாறு. 1921ம் ஆண்டில் இந்தப் புனித வீட்டில் தீப்பற்றியதால் முதன்முதலில் வைக்கப்பட்ட அன்னைமரியா திருஉருவம் அழிக்கப்பட்டுவிட்டது. இப்போது இங்கு வைக்கப்பட்டுள்ள சிறிய கறுப்பு நிற அன்னைமரியா திருஉருவம் லெபனன் நாட்டு கேதார் மரத்தால் செய்யப்பட்டது. விலையுயர்ந்த ஆபரணங்களாலும் அழகுபடுத்தப்பட்டுள்ளது.

லொரேத்தோவிலுள்ள இந்த நாசரேத் புனித வீடு குறித்து கத்தோலிக்க மரபில் ஒரு புதுமை சொல்லப்படுகின்றது. இந்த வீடு நாசரேத்தில் சிலுவைப்போர் காலத்தில் அழிக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கியது. எனவே 1291ம் ஆண்டில் வானதூதர்கள் இதனை தற்போதைய குரோவேஷிய நாட்டில் புதுமையாகக் கொண்டுவந்து வைத்தனர். ஏனெனில் அச்சமயத்தில் நாசரேத்தில் இவ்வீடு இருந்த இடம் திடீரெனக் காலியாக இருந்தது. அதேசமயம் அவ்வீடு குரோவேஷியாவில் காணப்பட்டது. பின்னர் அல்பேனிய முஸ்லீம்களின் ஆக்ரமிப்பினால் இவ்வீடு மீண்டும் தூதர்களால் 1294ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி இத்தாலியின் Recantiக்கு எடுத்துவரப்பட்டது. பின்னர் சிறிது காலம் கழித்து தற்போது இந்த வீடு அமைந்திருக்கும் லொரேத்தோவுக்கு எடுத்துவரப்பட்டது. இந்தப் புனித வீட்டை பல திருத்தந்தையர்கள், புனிதர்கள் உட்பட சிறிய பெரிய அளவில் பலரும் வணங்கி வருகின்றனர். பல புதுமைகளும் இடம்பெற்று வருகின்றன. இந்த வீடு நாசரேத்தில் காணப்பட்ட வீட்டைப் போன்ற பொருள்களைக் கொண்டிருப்பதாக அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்தப் புனித வீடு குறித்து மேலும் சில கூற்றுக்களும் சொல்லப்படுகின்றன.

புனித பூமியிலிருந்து கிறிஸ்தவ சிலுவைப் போர் வீரர்கள் முழுவதுமாக வெளியேற்றப்படுவதற்குச் சிறிது காலத்துக்கு முன்னதாக, நாசரேத் புனித வீட்டை Angelos என்ற அரச குடும்பம், லொரேத்தோவுக்கு எடுத்து வந்ததாகவும் ஒரு மரபு உள்ளது. நாம் ஏற்கனவே சொன்னது போல, வான தூதர்கள் இந்தப் புனித வீட்டின் கற்களை இங்கு கொண்டு வந்தார்கள் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் இருக்கிறது. இயேசு மரியா வளன் இறந்த பிறகு இவர்கள் வாழ்ந்த வீட்டை திருத்தூதர்கள் ஆலயமாக மாற்றினார்கள் என்றும் சொல்லப்படுகிறது. லொரேத்தோ புனித வீட்டைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான பசிலிக்கா 1469ம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த லொரேத்தோ அன்னைமரியாவை, 1920ம் ஆண்டில் திருத்தந்தை 15ம் பெனடிக்ட், விமானப் பயணம் செய்பவர்கள் மற்றும் விமான ஓட்டிகளுக்குப் பாதுகாவலராக அறிவித்தார்.

முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் அருளப்பர் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை ஆரம்பிக்கும் முன்னர் இந்த லொரேத்தோ அன்னைமரியா திருத்தலத்துக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். இந்த நிகழ்வின் 50ம் ஆண்டு மற்றும் திருஅவையில் தொடங்கியுள்ள நம்பிக்கை ஆண்டையொட்டி 2012ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி திருத்தந்தை 16ம் பெனடிக்ட் லொரேத்தோ அன்னைமரியா திருத்தலத்துக்குத் திருப்பயணம் மேற்கொண்டு திருஅவையை அன்னைமரியாவிடம் அர்ப்பணித்தார். இந்த நம்பிக்கை ஆண்டில் விசுவாசத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் இருக்கும் அன்னைமரியாவின் வாழ்வை நாமும் பின்பற்றுவோம்.

 

Categories: History of Shrine / Basilica